சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
வேலூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
காட்பாடி,
வேலூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தூய்மைக்கான மக்கள் இயக்கம்
வேலூர் மாநகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் தூய்மை பணியாளர்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, விழிப்புணர்வு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையொட்டி மாநகராட்சி 1-வது மண்டலத்தில் சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது. மேயர் சுஜாதா தலைமை தாங்கினார்.
மண்டல குழு தலைவர் புஷ்பலதா முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர் சிவக்குமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், மக்கள் இயக்கம் தொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் சீனிவாசன், டீட்டா சரவணன், உதவி கமிஷனர் செந்தில்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
2-வது மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மண்டல குழு தலைவர் நரேந்திரன் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் லூர்துசாமி முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் கணேஷ்சங்கர், சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், தூய்மை பணியாளர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை மேயர் மற்றும் கமிஷனர் வழங்கினார்.
விழிப்புணர்வு
3-வது மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மண்டல குழு தலைவர் யூசுப்கான் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் பாலமுருகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் திடக்கழிவு மேலாண்மை, குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
4-வது மண்டலம் சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்சிக்கு நகர்நல அலுவலர் முருகன் (பொறுப்பு) தலைமை தாங்கினார்.
கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ், சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.