கருணை அடிப்படையில் 75 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கருணை அடிப்படையில் 75 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2022-10-12 11:29 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இயற்கை எய்திய 75 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கிடும் அடையாளமாக 2 பேருக்கு பணி நியமன ஆணைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்காலிகமாகப் பணிபுரிந்து வந்த 586 பருவகால பட்டியல் எழுத்தர்கள், உதவுபவர்கள் மற்றும் பருவகால காவலர்கள் ஆகியோர் பணி நிரந்தரம் செய்யப்பட்டு, பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 2 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 50-ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, கழகத்தின் பணியாளர்களை சிறப்பிக்கும் வகையில், கழகத்தின் நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் சுமைதூக்கும் பணியாளர்கள் 12 ஆயிரத்து 177 பேருக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.1,500 வீதம் மொத்தம் ரூ.1.83 கோடியை வழங்கிடும் அடையாளமாக 15 பேருக்கு ஊக்கத் தொகைக்கான காசோலைகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.       

Tags:    

மேலும் செய்திகள்