அரசு பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்

தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க நாளை (புதன்கிழமை) கடைசி நாளாகும்.

Update: 2022-07-04 15:47 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க நாளை (புதன்கிழமை) கடைசி நாளாகும்.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தற்காலிக ஆசிரியர்கள்

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023-ம் கல்வியாண்டில் கடந்த 1-ந் தேதி முதல் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இடைநிலை ஆசிரியர் பதவிக்கு கல்வி தகுதியாக ஆசிரியர் பட்டய சான்று மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் தேர்ச்சி பெற்றவர்கள், மேலும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிந்து வருபவர்கள், பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு பொதுக்கல்வி, தொழிற்கல்வி பி.எஸ்சி., பி.ஏ., பி.லிட் மற்றும் பி.எட் சான்று, ஆசிரியர் தகுதி தேர்வு தாள் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. முதுகலை ஆசிரியர் பதவிக்கு, பொதுக்கல்வி மற்றும் தொழிற்கல்வி எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம் மற்றும் பி.எட். சான்று, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

நாளை கடைசி நாள்

தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். காலி பணியிட விவரங்கள் முதன்மைக்கல்வி, மாவட்ட கல்வி, வட்டார கல்வி அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் கடந்த 2-ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க நாளை (புதன்கிழமை) கடைசிநாள் ஆகும். குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்களை dharmapurideo@gmail.com., deoharur@gmail.com., deopalacode@gmail.com. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்