சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா நியமனம் -ஜனாதிபதி உத்தரவு

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக மும்பை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்துவரும் சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-05-26 20:52 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

அதன்பின்பு, தலைமை நீதிபதி பணியிடத்துக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. அதேவேளையில் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமிக்கப்பட்டார்.

அவர் ஓய்வுபெற்றதை தொடர்ந்து மூத்த நீதிபதியான டி.ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அவர் கடந்த 24-ந்தேதி ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த எஸ்.வைத்தியநாதன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

புதிய தலைமை நீதிபதி

அவர் நேற்று முன்தினம் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், புதிய தலைமை நீதிபதியாக மும்பை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்துவரும் சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 1962-ம் ஆண்டு மே மாதம் மராட்டிய மாநிலத்தில் பிறந்த நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து 1985-ம் ஆண்டு வக்கீல் பணியை தொடங்கினார்.

2010-ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மும்பை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்துவருகிறார்.

விரைவில் பொறுப்பேற்கிறார்

இவர், விரைவில் சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார்.

அடுத்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி இவர் ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்