போலீஸ் நிலையங்களில் பொதுமக்களிடம் இருந்து புகாரை பெற வரவேற்பாளர்கள் நியமனம்- அலுவலகத்திலேயே இருந்து கமிஷனர் கண்காணிக்க ஏற்பாடு

போலீஸ் நிலையங்களில் பொதுமக்களிடம் இருந்து புகாரை பெற வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கமிஷனர் அலுவலகத்திலேயே இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Update: 2022-10-10 21:20 GMT


போலீஸ் நிலையங்களில் பொதுமக்களிடம் இருந்து புகாரை பெற வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கமிஷனர் அலுவலகத்திலேயே இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தெரிவித்தார்.

புதிய திட்டம்

போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் சில போலீசார் கண்ணியமாக நடந்து கொள்வதில்லை என்ற புகார் தொடர்ந்து எழுந்தது.. அதனை போக்க மதுரை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் தனியாக வரவேற்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு, அவர் குறைகளை கேட்டு அதனை உடனே கம்ப்யூட்டரில் பதிவு செய்வார். அது கமிஷனர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு போலீசார் புகார் கொடுப்பவர்களிடம் நடந்து கொள்ளும் விதம், அவரின் புகார், அதனை விசாரிப்பவர் எவ்வாறு விசாரித்தார் என்பதை புகார் கொடுப்பவரின் தொலைபேசி எண்ணில் பேசி அனைத்தையும் தெரிந்து கொள்வார்கள்.

கண்காணிப்பு அமைப்பு

இந்த புதிய திட்டம் குறித்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது:-

மதுரை நகரில் போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்யவும், அவர்களின் குறைகளை விரைவாக தீர்க்கவும். பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் வெகுநேரம் காத்திருப்பதை தவிர்க்கவும். இதனை அனைத்தையும் கண்காணிக்க குறை நிவர்த்தி மற்றும் கண்காணிப்பு அமைப்பு என்ற திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு தனியாக ஒரு கணினி நிறுவப்பட்டுள்ளது. அவர் போலீஸ் நிலையத்திற்கு வரும் மனுதாரர்கள் கொடுக்கும் அவர்களது மனு விவரங்களை பதிவு செய்வார். அவ்வாறு கணினி மூலம் பதிவு செய்யப்படும் பதிவுகள் உடனுக்குடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள சர்வர் மூலம் கண்காணிக்கப்படும். பின்னர் மனுதாரர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் நடத்தப்பட்ட விதம், குறைகள் முறையாக கேட்கப்பட்டனவா என்ற விவரம் பெறப்படும். இதன் மூலம் போலீஸ் நிலைய வரவேற்பாளர்கள் மற்றும் போலீஸ் நிலைய அதிகாரிகள் மனுதாரர்களை கண்ணியமாக நடத்துவதை உறுதி செய்யப்படும். அதில் ஏதேனும் குறைகள் இருப்பின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று முறையாக தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய வரவேற்பாளர்கள் நியமனம்

மதுரை நகரில் உள்ள சட்டம் ஒழுங்கு மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் உள்ளடக்கிய 28 போலீஸ் நிலையங்களில் மீனாட்சி அம்மன் கோவில், அரசு ஆஸ்பத்திரி, ஐகோர்ட்டு போலீஸ் நிலையங்களை தீவிர மற்ற 25 போலீஸ் நிலையங்களிலும் வரவேற்பு பகுதியில் நவீன கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது. அந்த கேமராவும் 360 டிகிரி சுழலும் வகையிலும், அங்கு பேசுப்படும் அனைத்து பேச்சுகள் கேட்கும் வண்ணம் உள்ளது. அதனை மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் இருந்தவாறு கண்காணிக்கும் வகையில் பெரிய காட்சி திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் வெகுநேரம் காத்திருப்பது தெரியவரும் பட்சத்தில் அது கண்காணிப்பு கேமரா மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உடன் நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும். பொதுமக்கள் இது தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்பினால் 0452-2520760 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதற்காக தனியாக பெண் வரவேற்பாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்