கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்டசெவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்டசெவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி செவிலியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அவரிடம் மனு கொடுத்தனர்.
அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா காலத்தில் தற்காலிக செவிலியர்களாக பணியாற்றிய செவிலியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில்,
செவிலியர்கள்
கொரோனா பேரிடர் பெருந்தொற்று காலத்தில் கடந்த 2020-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் 300 மருத்துவர்கள் தற்காலிக முறையில் பணியமர்த்தப்பட்டனர். இதில் 3 ஆயிரம் செவிலியர்களுக்கு தற்காலிக செவிலியர் பணியில் இருந்து நிரந்தர தன்மையுடைய செவிலியர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், 300 தற்காலிக மருத்துவர்களும் நிரந்தர மருத்துவர்களாக பணிமாற்றம் செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 3 ஆயிரத்து 290 தற்காலிக செவிலியர்களுக்கு, அப்போது இருந்த 3 ஆயிரத்து 300 காலி பணியிடங்களில் நிரந்தர தன்மையுடைய செவிலியர்களாக மாற்றம் செய்ய வேண்டும் என அரசிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், எங்களை அரசு கடந்த 31.12.2022 அன்று பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக அரசிடம் பல முறை நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை. எனவே, ஐகோர்ட்டை நாடினோம். ஐகோர்ட்டு எங்களுக்கு பணி வழங்க உத்தரவிட்டு உள்ளது. எனவே, ஐகோர்ட்டு உத்தரவை நிறைவேற்றி எங்களுக்கு மீண்டும் நிரந்தர தன்மையுடைய பணியாணை வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
விநாயகர் சிலை
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சாந்தாராம் (32) என்ற தொழிலாளி அளித்த மனுவில், நான் தூத்துக்குடி முத்தையாபுரத்தில் குடும்பத்தோடு தங்கியிருந்து விநாயகர் சிலை செய்து வருகிறேன். இந்த நிலையில் நாங்கள் ரசாயனத்தை பயன்படுத்தி சிலைகளை செய்வதாக இந்து முன்னணி அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், சிலர் எங்களிடம் நேரடியாக வந்து விநாயகர் சிலை செய்யக் கூடாது என மிரட்டுகின்றனர். சாத்தான்குளம் அருகே எந்த மூலக்கூறுகளை கொண்டு விநாயகர் சிலை செய்கிறார்களோ, அதே மூலக்கூறுகளை கொண்டுதான் நாங்களும் தயாரிக்கிறோம். ஆகையால் கலெக்டர் தலையிட்டு எங்களை மிரட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.