காந்தி கிராம பல்கலைக்கழக துணை வேந்தராக குர்மித்சிங் நியமனம்; எதிர்ப்பு தெரிவித்து ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் 3 பேர் ராஜினாமா

காந்திகிராம பல்கலைக்கழக துணை வேந்தராக குர்மித்சிங் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் 3 பேர் ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-08 16:57 GMT

காந்திகிராம பல்கலைக்கழக துணை வேந்தராக குர்மித்சிங் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் 3 பேர் ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காந்திகிராம பல்கலைக்கழகம்

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமத்தில் காந்திகிராம பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த மாதேஷ்வரன் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து பல்கலைக்கழக வேளாண்மை துறை மூத்த பேராசிரியர் ரங்கநாதன் பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய பீகார் மத்திய பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எச்.சி.எஸ்.ரத்தோர் தலைமையில் 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை மத்திய அரசு நேற்று முன்தினம் நியமனம் செய்தது.

கூடுதல் பொறுப்பு

இந்தநிலையில் காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு மத்திய உயர்கல்வி அமைச்சகத்திடம் இருந்து நேற்று முன்தினம் ஒரு கடிதம் வந்தது. அதில் துணை வேந்தராக இருந்த மாதேஷ்வரன் ராஜினாமா செய்ததால், துணை வேந்தராக பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் ரங்கநாதன் நியமனம் செய்யப்பட்டார். அவர் அந்த பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார். அடுத்த 6 மாத காலம் அல்லது புதிய துணைவேந்தரை நியமிக்கும் வரை காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு, புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மித்சிங் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதைத்தொடர்ந்து பொறுப்பு துணைவேந்தராக இருந்த ரங்கநாதன் உடனடியாக துணைவேந்தர் பொறுப்பில் இருந்து விலகினார். மேலும் காந்திகிராம பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் இருந்து துணைவேந்தர் பெயர், படம் நீக்கப்பட்டது. தற்போது அந்த பக்கம் துணைவேந்தர் பெயர், படம் இல்லாமல் வெற்றிடமாக உள்ளது.

ராஜினாமா

இதற்கிடையே துணைவேந்தர் நியமனம் தொடர்பாக காந்திகிராம பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களாக இருந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆனந்தகுமார் (தமிழ்த்துறை), வில்லியம் பாஸ்கரன் (சமூக அறிவியல் துறை), பாலசுந்தரி (ஆங்கில துறை) ஆகிய 3 பேரும், தங்களது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

காந்திகிராம பல்கலைக்கழக சட்ட விதிமுறைகளின் படியும், பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின் படியும் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம் செய்யும் வரை, இதே பல்கலைக்கழகத்தில் உள்ள மூத்த பேராசிரியர் ஒருவரை தான் பொறுப்பு துணைவேந்தராக நியமிக்க வேண்டும். ஆனால் அந்த விதிமுறை மீறப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். இந்த விவகாரம் பல்கலைக்கழக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்