ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-19 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொருளாதார மேம்பாடு

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், இந்த இன மக்களில் 10 பேரை கொண்ட ஒரு குழுவிற்கு ஒரு ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க ஏதுவாக தலா ரூ.3 லட்சம் வீதம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள இத்தொழிலில் முன் அனுபவமுள்ளவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

நிபந்தனைகள்

குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

10 பேரை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். அனைவருக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும்.

பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட...

குழு உறுப்பினர்கள் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 3-ம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தேவையான சான்றுகளுடன் உரிய படிவத்தில் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்