மானிய விலையில் வேளாண்மை எந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் மானிய விலையில் வேளாண்மை எந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-13 12:53 GMT

திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் மானிய விலையில் வேளாண்மை எந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண் எந்திரங்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில், உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கு முதல் தவணையாக ரூ.46.51 லட்சம் மதிப்பில் 30 எந்திரங்கள் மற்றும் கருவிகனான டிராக்டர் 7, பவர்டில்லர் 10, பிரஷ் கட்டர் 1, களை எடுக்கும் கருவி 4, கலப்பை 1, தெளிப்பான் 3, பேலர் 1, பலவகை தானியம் கதிரடிக்கும் கருவி 1, மற்றும் ரோட்டவேட்டர் 2 ஆகியவைகளுக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் சிறு, குறு, மகளிர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் அல்லது அரசு நிர்ணயிக்கும் தொகை, இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அரசு நிர்ணயிக்கும் தொகை இதில் எது குறைந்த தொகையோ அதனை பின்னேற்பு மானியமாக விவசாயின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் கணக்கிடப்பட்டு தனியே வழங்கப்படும். கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வாங்க விரும்பும் திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு நகல், சிறு விவசாயி சான்று, வங்கிக் கணக்கு விவரம் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் இனத்தினை சேர்ந்தவர் எனில் சாதி சான்றிதழ் நகல் ஆகிய ஆவணங்களுடன் திருப்பத்தூர் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இப்பதிவின்படி முன்னுரிமை அடிப்படையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கு மானியம் வழங்கப்படும்.

2 எந்திரங்கள்

மேற்படி மானியம் ஒரு நிதியாண்டில் ஒருவருக்கு தேவைப்படும் ஏதாவது இரண்டு வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை மட்டுமே விவசாயிகள் வாங்க முடியும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அதே வகையான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் வாங்க முடியும். இந்த திட்டத்தின் மூலம் மானியம் பெற விருப்பமுள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், சிவசக்திநகர், புதுப்பேட்டை ரோடு, திருப்பத்தூர் என்ற அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்