நெசவுத்தொழில் தொடர்பான குறுகிய கால பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

நெசவுத்தொழில் தொடர்பான குறுகிய கால பயிற்சி பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-10 11:27 GMT

நெசவுத்தொழில் தொடர்பான குறுகிய கால பயிற்சி பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழில் முனைவோர் திட்டம்

கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டவாறு இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்த அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி ஆணை வெளியிட்டு உள்ளது.

அதன்படி இளைஞர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு வழங்குதல் அல்லது தொழில் முனைவோர்களாக உருவாக்குதல், பாரம்பரியமான கைத்தறி தொழிலை அதனுடைய பழமை மாறாமல் புத்துயிரூட்டுவது, கிராமப்புறத்தில் உள்ள இளைஞர்களுக்கு கைத்தறி தொழிலை ஒரு தொழிலாக அவர்கள் பகுதியிலேயே ஆரம்பித்தல், வேலையில்லாத இளைஞர்களுக்கு நெசவுத் தொழில் தொடர்பாக குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கைத்தறி நெசவில் நெசவுத்தொழில் நுட்பங்களை பயிற்சியின் வாயிலாக கற்பித்தல், இப்பயிற்சியின் வாயிலாக கைத்தறி பொருட்களின் உற்பத்தியில் தரத்தையும், அளவையும் மேம்படுத்துதல் போன்ற பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

இதில் முதற்கட்டமாக 300 இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250 வீதம் பயிற்சி காலம் முடிய ஊக்கத் தொகை வழங்கப்படும்.

விழிப்புணர்வு முகாம்

இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களாகவும், கைத்தறிகளை இயக்குவதற்கு தகுதி உள்ளவர்களாகவும், எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்கவும் வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேர விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.loomworld.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யவேண்டும்.

அல்லது இது தொடர்பாக வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை) திருவண்ணாமலை மாவட்ட வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள அசனமாப்பேட்டை அன்னை இந்திரா காந்தி மகளிர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெறும் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்