கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்தார்

Update: 2022-08-17 17:19 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தனியார் கல்வி நிலையங்களில்

மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021-2022-ம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதேபோல் 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை அதாவது ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதைப்பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடைசி நாள்

தகுதியான மாணவ-மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு அடுத்த மாதம்(செப்டம்பர்) 30-ந் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு வருகிற அக்டோபர் 31-ந் தேதி வரையிலும் இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள், தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ-மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

வழிகாட்டி நெறிமுறைகள்

இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்