தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்
தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் என்று தோட்டக்கலை அதிகாரி தெரிவித்தார்.
தேனி மாவட்டத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், தோட்டக்கலை பயிர்களான வாழை, கத்தரி, முட்டைக்கோஸ், தக்காளி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பயிர்காப்பீடு செய்வதால் அசாதாரண பருவ சூழல் அல்லது குறைவான மழையால் பயிர் சாகுபடி மேற்கொள்ள இயலாத நிலை, விதைப்பில் இருந்து அறுவடை வரை ஏற்படும் பயிர் இழப்புகள், புயல், ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, வெள்ளம் போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. அரசாணையின்படி, தேனி மாவட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட 27 தொகுப்பு பிர்க்காவில் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்யலாம்.
வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3,371.55 பிரீமியம் செலுத்தி பயிர்காப்பீடு செய்யலாம். அதற்கு வருகிற 28-ந்தேதி கடைசி நாள். கத்தரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1,185.60 செலுத்தி காப்பீடு செய்யலாம். அதற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள். முட்டைக்கோஸ் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1,155.95 செலுத்தி நாளைக்குள் காப்பீடு செய்ய வேண்டும். தக்காளி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.871.90 பிரீமியம் செலுத்தி நாளைக்குள் காப்பீடு செய்ய வேண்டும்.
இத்தகைய பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் காப்பீடு விண்ணப்பத்துடன் பதிவு கட்டணம், சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் தங்கள் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பொது சேவை மையங்கள் அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். இத்தகவலை தேனி தோட்டக்கலை துணை இயக்குனர் சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார்.