ஆண்டிப்பட்டியில் மேலும் 19 மாணவர்களுக்கு கொரோனா - பள்ளிக்கு 3 நாள் விடுமுறை...!
ஆண்டிப்பட்டி அரசு பள்ளியில் மேலும் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தேனி,
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 170 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படித்த மாணவர்கள் சிலருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து பள்ளியில் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
முதற்கட்டமாக 72 மாணவ-மாணவிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுது பள்ளியில் உள்ள இதர மாணவ-மாணவிகள் மற்றும் தொற்று பாதித்த மாணவர்களின் பெற்றோர்களிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த சோதனையில் அந்த பள்ளியில் மேலும் 19 மாணவர்களுக்கும், பெற்றோர் 9 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இரண்டு நாட்களில் ஆண்டிப்பட்டியில் மட்டும், 31 மாணவர்கள் உள்பட 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பள்ளிக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளியின் வகுப்பறைகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.