உதவியாளரின் மாமனார்-மாமியார் தாக்கப்பட்ட வழக்கில் முன்ஜாமீன்:போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டார் முன்னாள் அமைச்சர் எம்சி சம்பத்
நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எம்சி சம்பத் கையெழுத்திட்டார்.
நெல்லிக்குப்பம்,
பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத். இவரது உதவியாளராக இருந்த குமார் என்பவரின் மாமனார் மற்றும் மாமியார் தாக்கப்பட்டது தொடர்பாக எம்.சி.சம்பத், இவருடைய சகோதரர் எம்.சி.தங்கமணி உள்ளிட்ட 14 பேர் மீது பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் முன்ஜாமீன் கேட்டு எம்.சி.சம்பத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடலூர் கோர்ட்டு அவருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது.
இந்த முன்ஜாமீன் உத்தரவை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றம்- 1ல் சமர்ப்பித்து மாஜிஸ்திரேட்டு மகேஷ் முன்னிலையில் நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் ஆஜரானார்.
இதையடுத்து, மாஜிஸ்திரேட்டு மகேஷ் மறு உத்தரவு வரும் வரை முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு நேரில் வந்து கையெழுத்திட்டார். அப்போது போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டு இருந்தனர்.