போதைப்பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கம்
போதைப்பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தை போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்.
போதைப்பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தை போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்.
உறுதிமொழி
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரசாரம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (வௌ்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திருச்சி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமலாக்கப்பிரிவு சார்பில் நாளை திருச்சி மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து அரசு துறையும் ஒருங்கிணைந்து மாபெரும் போதைப் பொருள்கள் எதிர்ப்பு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையடுத்து நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், காந்தி மார்க்கெட் ஆர்ச் மற்றும் உறையூர் குறத்தெரு சந்திப்பு ஆகிய 4 இடங்களில் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே "போதைப்பொருள்களின் தீமைகள் குறித்தும், போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு, "போதைப்பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்க பிரசாரம்" நடத்தப்பட்டது. இதனை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
துண்டுபிரசுரம் வினியோகம்
மேலும் கோட்டை, காந்தி மார்க்கெட், உறையூர் ஆகிய இடங்களில் போலீஸ் துணைகமிஷனர்கள் மற்றும் போலீஸ் உதவி கமிஷனர்கள் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கையெழுத்திடும் வகையில் பெரிய அளவில் பலகை வைக்கப்பட்டு, போதைப்பொருள்களின் தீமைகள் மற்றும் போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு விளக்கி கூறி கையெழுத்து பெறப்பட்டது. மேலும் போதைப்பொருள்களின் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.