போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
வேலூரில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
வேலூரில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
போதைப்பொருள் ஒழிப்பு ஊர்வலம்
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி வேலூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் கோட்டை காந்திசிலை அருகே நடந்தது.
ஊர்வலத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், டி.ஐ.ஜி. முத்துசாமி, ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் அவர்கள் மாணவர்களுடன் சிறிதுதூரம் நடந்து சென்று போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காந்திசிலை அருகே இருந்து புறப்பட்ட ஊர்வலம் மக்கான் சிக்னல், பழைய பஸ்நிலையம், தெற்கு போலீஸ் நிலையம், அண்ணாசாலை, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தகவல் மையம் வழியாக சென்று நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
இதில் பள்ளி, கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டு "போதையில் நீ, வீதியில் குடும்பம். போதை பழக்கத்தை ஒழிப்போம், பூவுலகில் வாழ்ந்து காட்டுவோம். போகாதே, போகாதே, போதைக்கு போகாதே, அழிக்காதே, அழிக்காதே ஆயுளை அழிக்காதே" என்பது உள்ளிட்ட போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான வாசங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
ஊர்வலத்தில், உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) டாக்டர் பிரசன்னகுமார், உதவி கமிஷனர் (கலால்) முருகன், தாசில்தார் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக 'போதைப்பொருள் எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் மற்றும் நான் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதில்லை, நீங்கள்'? என்ற வாசகங்கள் எழுதிய பதாகையின் முன்பு நின்று பொதுமக்கள் செல்போனில் செல்பி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவற்றின் முன்பாக பொதுமக்கள், மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் நின்று செல்பி எடுத்து சமூகவலைதளங்களில் பதிவு செய்தனர்.