போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
ஆண்டிப்பட்டி அருகே அரசு பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கம் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஜெயபிரகாஷ், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கட்டுரை, பேச்சு, விளம்பரம் தயாரித்தல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு பரிசு வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆட்பட்டால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படுவதோடு, அவர்கள் பெற்றோரும் பாதிக்கப்பட்டு, தேசமும் பாதிக்கப்படும். எனவே தேசத்தின் விழுதுகளாக இருக்கக்கூடிய இளைஞர்கள் படிப்பிலும், விளையாட்டிலும் கவனம் செலுத்தி நல்ல சிந்தனைகளுடன் செயல்பட்டால் உயர்ந்த இடத்திற்கு செல்லலாம். அதற்காக திட்டமிடுங்கள். உங்கள் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.