ஊராட்சிகளுக்கு பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு: வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை 5 பேர் மீது வழக்குப்பதிவு

Update: 2023-06-06 19:30 GMT

தர்மபுரி

ஊராட்சிகளுக்கு பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு தொடர்பான புகாரின் பேரில் தர்மபுரியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முறைகேடு புகார்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணன் (வயது 55). இவர் மொரப்பூர், காரிமங்கலம், நல்லம்பள்ளி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து உள்ளார். மேலும் இவர் கடந்த 2018-2019-ம் ஆண்டுகளில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்தார்.

கொரோனா தொற்று காலகட்டத்தில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளுக்கும் பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சேலம் மண்டல லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் தலைமையில் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

5 பேர் மீது வழக்குப்பதிவு

அப்போது அந்த காலகட்டத்தில் 4 நிறுவனங்களில் இருந்து 580 மூட்டை பிளீச்சிங் பவுடர் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது. இதற்காக 4 நிறுவனங்களுக்கு தலா ரூ.7 லட்சத்து 48 ஆயிரத்து 699 என மொத்தம் ரூ.29 லட்சத்து 94 ஆயிரத்து 796 தொகை வழங்கப்பட்டதாகவும், ஆனால் அந்த நிறுவனங்களில் இருந்து பிளீச்சிங் பவுடர்கள் எதுவும் கிராம ஊராட்சிகளுக்கு சென்று சேரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கு போலி ரசீதுகள் தயாரித்து ரூ.27 லட்சத்து 85 ஆயிரம் கையாடல் நடந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், தற்போது பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் கிருஷ்ணன் மற்றும் விழுப்புரம், சென்னை, காஞ்சீபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களை சேர்ந்த பாப்பாத்தி, வீரய்யா பழனிவேலு, தாகிர் உசேன், வன ரோஜா ஆகிய 5 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

வீட்டில் சோதனை

இதைத்தொடர்ந்து தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் போலீசார் தர்மபுரி கருவூல காலனி பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனின் வீட்டில் நேற்று காலை 6.30 மணி முதல் சோதனை நடத்தினர். இந்த சோதனை மதியம் 12 மணி வரை நடைபெற்றது. 5 மணி நேரத்துக்கும் மேல் நடந்த இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்