அந்தியூர், கோபி பகுதியில்வன உயிரின சரணாலயம் அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்;விவசாயிகள் கோரிக்கை

அந்தியூர், கோபி பகுதியில் வன உயிரின சரணாலயம் அமைக்க மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2023-03-31 21:48 GMT

அந்தியூர், கோபி பகுதியில் வன உயிரின சரணாலயம் அமைக்க மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கிருஷ்ணனுன்னி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பேசும்போது கூறியதாவது:-

கடந்த 2018-ம் ஆண்டு ஒரு தேங்காய் ரூ.12-க்கு விற்பனையானது. ஆனால் இன்று ரூ.6-க்கு விற்பனையாகிறது. எனவே, விவசாயிகளுக்கு அதிக கடனைக்கொடுத்து கடனாளி ஆக்காமல், விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். எல்லா ஒன்றியங்களிலும், 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை விவசாய பணிகளுக்கு அனுப்ப வேண்டும்.

வெள்ளை அறிக்கை

மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காததால், பெரும்பாலான விவசாயிகள் மஞ்சள் பயிர் செய்வதை தவிர்க்க தொடங்கியுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் மஞ்சள் நகரம் என்ற பெயரை ஈரோடு மாவட்டம் இழந்து விடும். மஞ்சளுக்கான விலை வீழ்ச்சி ஏற்படும்போது, அரசு அதனைக்கொள்முதல் செய்ய முன்வர வேண்டும்.

இந்துசமய அறநிலையத்துறையின் நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகள் வழங்கும் நெல்லுக்கு, தமிழக அரசின் ஊக்கதொகை மறுக்கப்படுகிறது. இதை வழங்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தின் வக்பு வாரிய நிலம் என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதால், ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

வன உயிரின சரணாலயம்

அந்தியூர், கோபி பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வனவிலங்கு சரணாலயம் அமையும் பகுதியில் இருந்து, 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கல்குவாரிகள் இயக்கக்கூடாது. இந்த பகுதியில் புதிய கல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. ஏற்கனவே செயல்படும் ஆலைகளின் உரிமத்தை புதுப்பிக்கக்கூடாது.

மேலும், வன உயிரின சரணாலயம் அமைப்பதற்கு முன்பாக நிபுணர் குழு அமைத்து, மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். வன உரிமை சட்டத்தை அமல்படுத்திய பிறகு சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியின விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் கிஷான் திட்ட நிதி உதவி வழங்க வேண்டும்.

தண்ணீர் திருட்டு

பவானி ஆற்றில் தண்ணீர் திருட்டு நடக்கிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சள் மண்டி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, விவசாயிகளுக்கு உரிய தொகையை பெற்றுத்தர வேண்டும். காலிங்கராயன் கால்வாய் பேபி கால்வாயில் சேர்ந்துள்ள கழிவுகளை அகற்ற வேண்டும். உயர்மின் கோபுரம் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

ஈரோட்டில் இயற்கை வேளாண் அங்காடிகள் மற்றும் மஞ்சள் பூங்கா அமைக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். நாட்டுசர்க்கரையில் கலப்படத்தை தடுக்க வேண்டும். தொழிற்சாலைகளில் பிளாஸ்டிக்கை எரிப்பதால் மாசு ஏற்படுகிறது. இதை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நெல் கொள்முதல் மையம்

இதைத்தொடர்ந்து கலெக்டர் கிருஷ்ணனுன்னி கூறியதாவது:-

பிளாஸ்டிக் எரிப்பு மற்றும் நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பது தொடர்பான மனுக்கள் மீது விசாரணை நடத்தி மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அடுத்த கூட்டத்தில் பதில் அளிக்க வேண்டும். மலைப்பகுதிகளில் வனத்துறை சார்பில் குறைதீர் கூட்டம் நடத்தப்படும். நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் பணம் பெறப்படுவது குறித்த புகார்கள் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வொரு நெல் கொள்முதல் மையத்திலும், புகார் தெரிவிக்க வேண்டிய உயர் அதிகாரியின் பெயர் மற்றும் செல்போன் எண் குறிப்பிட்ட அறிவிப்பு பலகையை 3 நாட்களுக்குள் வைக்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை அலுவலர்கள் எடுக்க வேண்டும்.

உயர்மின் கோபுரம்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஈரோடு மற்றும் கோபி கோட்ட வருவாய் அலுவலர்கள் அடுத்த 15 நாட்களுக்குள் கூட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும். இனிமேல், ஒவ்வொரு மாதமும், வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும்.

உயர்மின் கோபுரம் அமைக்க நிலம் வழங்கியவர்களுக்கான இழப்பீடு தொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகளை 15 நாட்களுக்குள் இந்த குழு சந்தித்து குறைகளை கேட்டறிந்து, அதனை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்க எனது செல்போன் எண்ணில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்