சிறுவன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் சரண்

சிறுவன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் சரண் அடைந்தார்.

Update: 2023-03-16 18:08 GMT

பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்த கணேசன் மகன் ரோஹித் ராஜ்(வயது 14). இவர் 9-ம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பெற்றோருடன் பூ கட்டி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். ரோஹித் ராஜிக்கு பெரம்பலூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் சீனிவாசன் (22) உள்பட சமூக விரோதிகள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டு கஞ்சா புகைக்க பழகிக்கொண்டதாக கூறப்படுகிறது. சீனிவாசன் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள் சிலவற்றை அண்மையில் ரோஹித் ராஜ் எடுத்துச் சென்றுவிட்டதாக கருதி சீனிவாசன் உள்ளிட்டோர் ரோஹித்தை பிடித்து தாக்கி மிரட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரோஹித் இவர்கள் கஞ்சா வைத்திருக்கும் விபரத்தை போலீசில் கூறிவிடுவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்ய திட்டமிட்டு கடந்த 12-ந் தேதி இரவு 7 மணியளவில் ரோஹித்தை மது பாட்டில்களை கொண்டு குத்து கொலை செய்தனர்.

கொலை சம்பவத்தில் தொடர்புடைய 3 சிறுவர்கள் மற்றும் பெரம்பலூர் திருநகரைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் அய்யனார் (23), பெரம்பலூர் இந்திரா நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் சீனி (எ) சீனிவாசன் (22) ஆகியோர் கடந்த 14-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட வேப்பந்தட்டை தாலுக்கா பூலாம்பாடி அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் (19) தனது வக்கீல் மூலம் நேற்று பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலையில் சரணடைந்தார். ரஞ்சித்தை கைது செய்த போலீசார் அவரிடம் இந்த கொலை குறித்துமேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்