மினி லாரி மீது மற்றொரு லாரி மோதி பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலி
Another lorry collided with a mini lorry, killing 2 including a school student
ஆட்டு சந்தைக்கு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை மேல்ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவரது மகன் அப்துல் கரீம் (வயது 39), இவர் ஆடு வியாபாரம் செய்து வந்தார். இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள சந்தையில் ஆடுகளை வாங்கி கந்திலி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தையில் வியாபாரம் செய்வது வழக்கம்.
நேற்று அதிகாலை 5 மணியளவில் அப்துல் கரீம் 25 ஆடுகளை விற்பனை செய்வதற்கு 5-ம் வகுப்பு படிக்கும் தனது மகன் அப்துல் சலாம் (11), மல்லப்பள்ளி ரோடு பகுதியை சேர்ந்த நசீர் அகமது, இவரது மகன் ஷாருக்கான் (28), கிருஷ்ணமூர்த்தி, அகிம், பரத், பெருமாள் ஆகிய 7 பேரும் மினி லாரியில் கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி பகுதியில் உள்ள சந்தைக்கு சென்றனர்.
லாரி மோதி 2 பேர் பலி
மினி லாரியை பாரண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் ஓட்டிச் சென்றார். கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளியை அடுத்த பையனப்பள்ளி கூட்ரோடு பகுதியில் சென்ற போது பின்னால் சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த கொரியர் லாரி, மினி லாரி மீது மோதியது. இதில் மினி லாரி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த டிரைவர் உள்பட 8 பேரும் காயமடைந்தனர். 25 ஆடுகளும் காயமடைந்தன.
இதில் ஷாருக்கான் தலை நசுங்கி சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் அப்துல் சலாம் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.