ஆயுதத்துடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் மீது மேலும் ஒரு வழக்கு
ஆயுதத்துடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் மீது மேலும் ஒரு வழக்கு
கோவை
ரவுடிக்கு ஆதரவாக மிரட்டல் விடுத்து ஆயுதத்துடன் மீண்டும் வீடியோ வெளியிட்ட இளம்பெண் மீது போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரவுடிகள்
கோவை மாநகர பகுதியில் கடந்த மாதத்தில் அடுத்தடுத்து 2 கொலைகள் நடந்தன. இது கோவை மாநகர பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதில், ரவுடிகளுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலைகள் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில், 54 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண்
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வினோதினி என்ற தமன்னா (வயது 23) என்பவர் பிரண்ட்ஸ் கால் மி தமன்னா என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்து உள்ளார். அதில் அவர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களு டன் மிரட்டல் விடுப்பதுபோன்று வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
இது தொடர்பாக கோவை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் நர்சிங் படித்த தமன்னா, கோவை காளப்பட்டியில் தங்கி கஞ்சா விற்பனை செய்து வந்ததும், அவருக்கு, ரவுடிகளுடன் தொடர்பு ஏற்பட்டதும் தெரியவந்தது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மீண்டும் வீடியோ வெளியீடு
இந்த நிலையில், தலைமறைவாக உள்ள தமன்னா, மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். விக்கு- நா- பேன்ஸ் போத்தனூர் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைபிடித்தபடி அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் ரவுடிக்கு ஆதரவாக மற்றவர்களை மிரட்டியபடி வீடியோ வெளியிட்டு உள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் தமன்னா மீது வன்முறையை தூண்டுதல், தடையை மீறி ஆயுதங்கள் வைத்திருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்த னர். தலைமறைவாக இருக்கும் தமன்னா மீண்டும் வீடியோ வெளியிட்டு இருப்பது போலீசாருக்கு சவாலை ஏற்படுத்தி உள்ளது.
தனிப்படை விரைவு
எனவே அவருடைய செல்போன் எண்ணை வைத்து அவர் எங்கு பதுங்கி உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரை பிடிக்க தனிப்படை விருதுநகர், திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கும் போலீசார் விரைந்து உள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, இளம்பெண் தமன்னா ஆயுதத்துடன் நிற்கும் புகைப்படம், வீடியோக்களை அந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து அழிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் நாங்கள் அவரை விரைவில் பிடித்து விடுவோம் என்றனர்.