விழுப்புரத்தில் பரபரப்பு:பிரபல வணிக வளாகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்; தனியார் நிறுவன ஊழியர் கைது
விழுப்புரத்தில் பிரபல வணிக வளாகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
பிரபல வணிக வளாகம்
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் பிரபல தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்திற்கு கடந்த 12-ந்தேதி தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து வணிக வளாகத்தில் உள்ள பல்பொருள் அங்காடி, ஜவுளிக்கடை, ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள், கான்பரன்ஸ் ஹால், தங்கும் விடுதி ஆகியவற்றில் இருந்த பொதுமக்கள், ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை நடந்தது. அப்போது அது புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சைபர்கிரைம் பிரிவு போலீசாரின் உதவியுடன் விசாரணை நடத்தினர். ஆனால் கடந்த 6 நாட்களாகியும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், போலீசாரின் பிடியில் சிக்கவில்லை.
மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
இந்நிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் அந்த வணிக வளாகத்தில் உள்ள தொலைபேசி மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதில் அதிர்ச்சியடைந்த அந்நிறுவன மேலாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், ஆனந்தன், மூர்த்தி மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த வணிக வளாகத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்த பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டு வணிக வளாகத்தில் உள்ள 4 தளங்களிலும் தீவிர சோதனை நடத்தினர்.
சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனை மாலை 6 மணியளவில் முடிவடைந்தது. இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதன் பிறகுதான் இது வெறும் புரளி என்பது தெரியவந்ததையடுத்து பொதுமக்கள், நிறுவன ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
தனியார் நிறுவன ஊழியர்
இதையடுத்து பிரபல வணிக வளாகத்திற்கு 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது திருவெண்ணெய்நல்லூர் தாலுகா பெரியசெவலை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் மகன் பிரபாகரன் (வயது 26) என்பதும், அவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதும் தெரிந்தது. பின்னர் பெரியசெவலைக்கு விரைந்துசென்ற போலீசார், பிரபாகரனை மடக்கிப்பிடித்து விழுப்புரம் அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிரபாகரன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த வணிக வளாகத்திற்கு பொருட்கள் வாங்கச்சென்றதும் அப்போது அவர் வைத்திருந்த ரூ.7 ஆயிரத்தை தவறவிட்டதும், உடனே அவர் அங்குள்ள ஊழியர்களிடம் சென்று முறையிட்டு பணத்தை கண்டுபிடிப்பதற்காக சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பு பதிவுகளை காண்பிக்குமாறு கூறியுள்ளார். ஆனால், வணிக வளாக ஊழியர்கள் வேலை நெருக்கடியில் பிரபாகரன் கூறியதை பொருட்படுத்தாமலும், அவருடைய பணத்தை தேடி கண்டுபிடிக்காமலும் அலட்சியமாக இருந்துள்ளனர்.
கைது
இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன், பணத்தை இழந்த விரக்தியில் அந்த வணிக வளாக வியாபாரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கத்தில், விழுப்புரம் நகராட்சி பூங்காவில் அரசு தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ஒருவரிடம் செல்போனை வாங்கி வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து, பிரபாகரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விழுப்புரம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.