மீனவர்களை மீட்க சென்ற மற்றொரு விசைப்படகு, கடலில் மூழ்கியது
படகு பழுதாகி தத்தளித்த மீனவர்களை மீட்க சென்ற மற்றொரு விசைப்படகில் ஓட்டை விழுந்ததால் கடலில் மூழ்கியது.
படகு பழுதாகி தத்தளித்த மீனவர்களை மீட்க சென்ற மற்றொரு விசைப்படகில் ஓட்டை விழுந்ததால் கடலில் மூழ்கியது.
கடலில் தத்தளித்த மீனவர்கள்
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த பாக்கியலெட்சுமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், அதே பகுதியை சேர்ந்த 13 மீனவர்கள் கடந்த 24- ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்., இவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகு என்ஜினில் கோளாறு ஏற்பட்டு நடுகடலில் தத்தளித்து கொண்டிருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த அருண் என்பவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் வசந்தன், ராம்குமார் ஆகியோருடன் கடலில் தத்தளிக்கும் 13 மீனவர்களை மீட்க சென்றார்.
விசைப்படகு மூழ்கியது
கடலில் சென்ற போது அருணுக்கு சொந்தமான விசைப்படகில் திடீரென ஓட்டை விழுந்தது. இதனால் படகுக்குள் தண்ணீர் புகுந்தது..இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் படகில் ஏற்பட்ட ஓட்டையை அடைக்க முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி பலனளிக்காமல் விசைப்படகு மூழ்கியதால், அருண் உள்பட 3 மீனவர்களும் கடலில் குதித்து தத்தளித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற மற்றொரு மீனவர்கள், கடலில் தத்தளித்து கொண்டிருந்த அருண் உள்ளிட்ட 3 மீனவர்கள் மற்றும் படகு பழுதாகி தவித்த 13 மீனவர்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். நேற்று இரவு நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகம் அழைத்து வரப்பட்ட மீனவர்களை பார்த்த அங்கு திரண்டிருந்த அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதையடுத்துஅருண், வசந்தன், ராம்குமார் ஆகிய 3 மீனவர்களையும் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த நாகை கலெக்டர் அருண் தம்புராஜ், ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த 3 மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கண்ணீர் மல்க கோரிக்கை
வட்டிக்கு கடன் வாங்கி, நகைகளை அடகு வைத்து கட்டப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான விசைப்படகு மூழ்கியதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
பழுதாகி நின்ற விசைப்படகை மீட்க சென்ற மற்றொரு விசைப்படகில் ஏற்பட்ட ஓட்டையால் அந்த விசைப்படகு மூழ்கிய சம்பவம் நாகை மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.