திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கேட்பாரின்றி கிடந்த மூட்டையில் மேலும் 14 கிலோ கஞ்சா

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கேட்பாரின்றி கிடந்த மூட்டையில் மேலும் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-10-12 20:18 GMT

14 கிலோ கஞ்சா

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் உள்ள 2-வது நடை மேடை சுரங்கப்பாதையில் நேற்று முன்தினம் சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபரை பிடித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஒடிசாவை சேர்ந்த பிரமோத்நாயக் (வயது 26) என்பதும், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி வந்ததும் தெரியவந்தது. அவருடைய உடைமைகளை சோதனை செய்தபோது, 2 பண்டல்களில் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ கொண்ட கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இந்தநிலையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் அந்த நடைமேடையில் சோதனை செய்தபோது, ஒரு மூட்டை கேட்பாரின்றி கிடந்தது. அதை கைப்பற்றி சோதனை செய்தபோது அதில் 6 பண்டல்களில் ரூ.2¾ லட்சம் மதிப்பில் 14 கிலோ கஞ்சா இருந்தது. பிரமோத்நாயக் தான் அதை கடத்தி வந்தாரா? அல்லது வேறு யாரேனும் கடத்தி வந்தனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மொத்த வியாபாரி உள்பட 6 பேர் கைது

*திருச்சி மாநகரில் நேற்று முன்தினம் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி, திருச்சி காந்தி மார்க்கெட்டில் 3 பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றதாக மதிவாணன் (61), முருகன் (47), சவுகத்அலி (42) ஆகியோரையும், ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள பீடா கடை மற்றும் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக ராஜேஷ் (28), பரணிகுமார் (40) ஆகியோரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களுக்கு தென்னூர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (37) புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. அவருடைய வீட்டில் சோதனை செய்து 164 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, ராமசந்திரனை தில்லைநகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். இதில் ராமசந்திரன், ராஜேஷ், பரணிகுமார் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மின் விபத்தில் தொழிலாளி படுகாயம்

*தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவர் மின்வாரிய கேங்மேனாக ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று பெரிய மிளகுபாறை அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ராஜீவ்காந்தி பணி செய்து கொண்டு இருந்தபோது, மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தநிலையில் கேங்மேன் ராஜீவ்காந்தியை பாதுகாப்பற்ற முறையில் பணியில் ஈடுபடுத்தியதாகவும், இதை கண்டித்து மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தென்னூர் முதன்மை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்