ஆனித்திருவிழா கொடியேற்றம்

வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

Update: 2022-07-03 15:10 GMT

வாசுதேவநல்லூர்:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் என்ற சிந்தாமணிநாதர் கோவில் உள்ளது. பழமைவாய்ந்த இந்த கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை மூலவர் அர்த்தநாரீஸ்வரர், கொடிக்கம்பம், அனைத்து தெய்வங்களுக்கும் பால், தயிர், பன்னீர், நெய், இளநீர், விபூதி, குங்குமம், சந்தனம் உள்பட 21 வகை நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

வாசனை மலர்களாலும், வண்ண பட்டு ஆடைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. காலை 8.45 மணியளவில் கொடி ஏற்றப்பட்டது. காலை 11 மணியளவில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடந்தது. கொடியேற்ற மண்டகப்படிதாரர், அன்னதான மண்டகப்படிதாரர், நிர்வாக அலுவலர் (பொறுப்பு) அசோக்குமார் மற்றும் அனைத்து சமுதாய மண்டகப்படி தாரர்கள், உபயதாரர்கள், நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் சுவாமி, அம்மாளுக்கு சிறப்பு பூஜைகள், திருவீதி உலா, பக்தி சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந்தேதி மதியம் 1 மணிக்கு நடக்கிறது. மறுநாள் தெப்ப தேரோட்டம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்