அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் நள்ளிரவில் போராட்டம்

கல்வி சுற்றுலா செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-27 18:45 GMT

அண்ணாமலைநகர்

கல்வி சுற்றுலா

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மேலாண்மை துறையில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் கல்வி சுற்றுலா செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்வதற்காக சம்பந்தப்பட்ட துறை தலைவரிடம் கடந்த 2 மாதங்களாக அனுமதி கேட்டுள்ளனர். அதற்கு பலமுறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இறுதியாக சுற்றுலா செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது.இதையடுத்து கல்வி சுற்றுலா செல்வதற்காக மேலாண்மை துறை மாணவ- மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு தங்கள் உடைமைகளுடன் பல்கலைக்கழகத்திற்கு வந்து பஸ்சுக்காக காத்திருந்தனர்.

நள்ளிரவில் மாணவர்கள் போராட்டம்

இந்த நிலையில் கல்வி சுற்றுலா செல்வதற்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தில் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, துறைத் தலைவர் உதயசூரியன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது 28-ந் தேதி (அதாவது இன்று வெள்ளிக்கிழமை) கல்வி சுற்றுலா செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்