அண்ணாமலை இதற்கு பதில் சொல்லியே ஆகணும்... ரெயிலில் பணம் சிக்கியது குறித்து சீமான் கேள்வி
நெல்லை விரைவு ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைதான் பதில் சொல்ல வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
வேலூர்,
வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்தை ஆதரித்து வேலூர் மண்டித்தெருவில் நாம் தமிழர் கட்சி தலைமை சீமான் பிரசாரம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான் கூறியதாவது:-" எல்லா இடத்திலும்தான் காசு கொடுக்கப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை ஒழுங்கமைக்க வேண்டுமானால் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்களை 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை செய்ய வேண்டும்.
தேர்தலில் ஓட்டுக்கு காசு தரமாட்டோம் என்று சொன்னவர் தம்பி அண்ணாமலை. இப்போது அண்ணாமலைதான் ரூ4 கோடி பிடிபட்டது குறித்து பதில் சொல்ல வேண்டும். ஆகையால் பத்திரிகையாளர்கள் அண்ணாமலையிடம் இது குறித்து கேட்டு பதில் சொல்ல வேண்டும். நமது முன்னோர்கள் போராடிப் பெற்ற ஜனநாயகம் இப்போது எவ்வளவு கொடுமையான பணநாயகமாக மாறிவிட்டது. இதை ஒழித்து தூய ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும். நாங்கள் காசு கொடுப்பவர்கள் இல்லை. அதனால் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிடுகிறோம்" என்றார்.
முன்னதாக நேற்று இரவு சென்னையில் இருந்து நெல்லை செல்லும் விரைவு ரெயிலில் பயணித்த 3 பேரை போலீசார் மடக்கி விசாரித்த போது ரூ4 கோடி சிக்கியது. இந்த 3 பேரும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள். இதனால் நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், பிடிபட்ட பணத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறி வருகிறார்.