அண்ணாமலை அரசியல் 'ஸ்டண்ட்' செய்கிறார்
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அரசியல் ஸ்டண்ட் செய்கிறார் என்று வேலூரில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
பிறந்தநாள் விழா
அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் பிறந்தநாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு அம்பேத்கர் உருவபடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கதிர்ஆனந்த் எம்.பி., கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறுகையில், காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்தை நாங்கள் தான் செய்து வருகிறோம். வெளிநாட்டில் நிதி வாங்கி பணிகளை செய்து வருகிறோம். தற்போது கால்வாய் வெட்டும் பணி நடந்து வருகிறது. ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் பணிகள் நடந்து வருகிறது. 2 கட்டப்பணிகள் முடிந்துள்ளது. அடுத்ததாக அடுத்த 2 கட்டப்பணிகள் தொடங்கப்படும் என்றார்.
அரசியல் ஸ்டண்ட்
அப்போது அவரிடம் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தி.மு.க. நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் தங்களின் மகன் கதிர்ஆனந்த் பெயரும் இடம்பெற்றுள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் அதை நான் பார்க்கவில்லை. எனக்கு அது தெரியாது. இதெல்லாம் அண்ணாமலை செய்யும் அரசியல் ஸ்டண்ட் என்றார்.
பின்னர் அவர் வேலூர் மக்கானில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.