அரசு ஊழியர்கள் 2.9 சதவீத வட்டி குறைவாக பெறுவதற்கு தமிழக அரசே காரணம் அண்ணாமலை குற்றச்சாட்டு

ஓய்வூதிய நிதி வைப்பின் தவறான கொள்கையால், தமிழக அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு 2.9 சதவீத வட்டி குறைவாக பெறுவதற்கு தமிழக அரசே காரணம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Update: 2022-06-03 23:08 GMT

சென்னை,

10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நிதி எங்கே வைப்பு வைக்கப்பட்டுள்ளது என்ற எங்களது கேள்விக்கு தமிழக நிதி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

மாநில அரசு ஊழியர்களின் உரிமைகளை நமது நிதி அமைச்சர் எவ்வாறு தடுக்கிறார் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு 14 சதவீதமாகும். அதுவே தமிழக அரசின் பங்களிப்பு 10 சதவீதம் மட்டுமே. 10 சதவீதம் மட்டுமே தமிழக அரசு பங்களிப்பாக கொடுப்பதால் மாநில அரசு ஊழியர்கள் 4 சதவீதம் கூடுதல் பங்களிப்புகளை இழக்கிறார்கள். மறுபுறம், மாநில அரசு 4 சதவீத செலவீனங்கள் குறைகிறது.

சரிவை நோக்கி...

இரண்டாவதாக, வட்டியைப் பற்றி, தற்போதைய வட்டி விகிதம் 7.1 சதவீதம் என்று நிதி அமைச்சர் கூறுகிறார். ஊழியர் மற்றும் அரசின் பங்களிப்புகளை வேறு எங்கோ வைப்பு வைப்பதற்கு பதிலாக பி.எப்.ஆர்.டி.ஏ.ல் டெபாசிட் செய்திருந்தால், தமிழக அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு 10 சதவீத வட்டி விகிதத்தைப் பெற்றிருப்பார்கள். இப்பொழுது ஊழியர்கள் ஆண்டுக்கு 2.9 சதவீத வட்டி குறைவாக பெறுவதற்கு தமிழக அரசே காரணம்.

2022-2023-ம் ஆண்டில், அரசுக்கு ஓய்வூதிய செலவு ரூ.39,508 கோடி, மேலும் ஓய்வூதிய நிதியில் தற்போது இருக்கும் மொத்தத் தொகை ரூ.53,555 கோடி. தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான பணத்தை மாநில அரசு தொடர்ந்து டெபாசிட் செய்யாததாலும் பி.எப்.ஆர்.டி.ஏ.வில் நிதியை டெபாசிட் செய்ய வேண்டாம் என முடிவு செய்துள்ளதாலும், மாநில ஓய்வூதிய நிதியின் வைப்பு தொடர்ச்சியாக சரிவை நோக்கி செல்லும் அபாயம் உள்ளது.

மேலும் பணம் வெளியேறும் தொகையுடன் ஒப்பிடும்போது திரட்டப்பட்ட வட்டி போதுமானதாக இல்லாத சூழ்நிலை அரசுக்கு ஏற்படும். 2022-2023-ம் ஆண்டில் ஓய்வூதியங்களுக்கான செலவினம் மொத்த வருவாய் வரவுகளில் 17.07 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் இது தொடர்ந்தால் நாம் எதிர்பார்ப்பதை விட வைப்பு நிதியின் சரிவு விரைவாக நடக்கும்.

புரிந்து கொண்டிருப்பார்

மேல் சொன்ன விவரங்களின் உண்மை தன்மையை நிதி அமைச்சர் புரிந்துகொண்டாலும் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளமாட்டார் என்பது எங்களுக்கு தெரியும்.

10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஓய்வூதிய நிதியின் குறைந்த வைப்பு எவ்வாறு வந்தது என்பதை நிதி அமைச்சர் இப்போது புரிந்து கொண்டிருப்பார் என்றும் நாங்கள் நம்புகின்றோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்