திருவள்ளூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழா

திருவள்ளூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழாவை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-16 10:17 GMT

தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழா

முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையம் சார்பாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழா நடைபெற்றது. விழாவில் அண்ணல் அம்பேத்கர் உருவப்படத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மரியாதை செலுத்தி அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2023-24-ம் நிதிநிலை அறிக்கையில் நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்து அறிவித்தார். இந்த திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கும் நிகழ்வு நடக்கிறது.

அரசு வழங்கும் சுய தொழில் ஊக்குவிப்பு மானியங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு சரியான முறையில் சென்று சேருவதில்லை என்பதாலும் அவர்களுக்கு உரிய பலன் கிடைப்பதில்லை என்பதாலும் முதல்-அமைச்சர் ஆலோசனையின் படி இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சாதிக்க துடிக்கின்ற

தொழில் தொடங்க விருப்பமுள்ள சாதிக்க துடிக்கின்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு உரிய வாய்ப்பளிக்கும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி திட்டமாக இந்த திட்டம் அமைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இந்த திட்டத்தை பொறுத்தவரைக்கும் 65 சதவீதம் கடன் உதவியாகவும், 35 சதவீதம் அரசு மானியமாகவும் வழங்கப்படும். ஒரு வங்கியில் கடன் பெறுவதோடு நமது பிரச்சினை முடிவடைவதில்லை. எந்த நோக்கத்திற்காக அந்த கடன் வாங்கப்பட்டதோ குறிப்பாக தொழில் முன்னேற்றத்திற்காக கடன் வாங்கப்பட்டால் அந்த தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும்.

அதற்கான முயற்சிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி செயல்படுத்த வேண்டும். ரூ.1 லட்சம் கடன் பெற்றால் அதனை உரிய முறையில் அடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான கடனை பெற்று தொழிலை விருத்தியாக்கி ரூ.5 லட்சத்தை அடைத்து மேற்கொண்டு அதிகமான கடனை பெற்று தன் தொழிலை முன்னெடுத்து செல்ல வேண்டும். இதற்காக மாவட்ட நிர்வாகமும் மாவட்ட தொழில் மையமும் உங்களுக்கு உதவுவதற்கு எப்போதும் தயாராக உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திட்ட விளக்க கையேட்டை கலெக்டர் வெளியிட்டார். இதில் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சேகர், தாட்கோ மாவட்ட மேலாளர் இந்திரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விஜயமாலா, தொழில் முனைவோர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்