ஆனித்தேரோட்டம் முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம்-கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்தது

நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் விஷ்ணு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-06-23 18:55 GMT

நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் விஷ்ணு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தேர் திருவிழா

நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோவில் ஆனித் திருவிழா வருகிற 3-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11-ந் தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெற உள்ளது. இவ்விழா சிறப்பாக நடைபெற நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் நெல்லை மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

ஆக்கிரமிப்புகள்

கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு பேசும்போது கூறியதாவது:-

பக்தர்களின் நலன் கருதி மாநகராட்சி சார்பாக கோவிலை சுற்றியுள்ள 4 ரதவீதிகளிலும் தார்சாலை சீரமைக்கப்பட்டு தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தெற்கு ரதவீதி, கீழ ரதவீதி பகுதிகளில் உள்ள வடிகாலில் பக்கசுவர்கள் இல்லாத இடங்களில் தற்போது காங்கீரிட் சுவர்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணி ஒருவார காலத்திற்குள் முடிக்கப்படும்.

தேரோட்டத்தை முன்னிட்டு பொது சுகாதார பிரிவு மூலம் மருத்துவ முகாம்கள் தேவைபடும் இடங்களில் அமைக்கபட உள்ளது. மேலும் 4 ரதவீதிகளிலும் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் நிறுவப்படும். மாநகராட்சி அலுவலர்கள் தேர் தங்குதடையின்றி செல்ல வசதியாக சாலையோர ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

டவுன் கூலக்கடை பஜார், தெற்கு மவுன்ட் ரோடு, வடக்கு மவுன்ட்ரோடு, நயினார்குளம் சாலை பகுதிகளில் உள்ள மாநகராட்சி நவீன கட்டண கழிப்பிடங்களில் திருவிழாவை முன்னிட்டு கட்டணமின்றி பொதுமக்கள் பயன்படுத்தவும், மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கோவிலை சுற்றி பொதுமக்கள் வருகை தரக்கூடிய பாதைகளில் நடமாடும் கழிப்பறை வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டது.

தேர் செல்லும் சாலையின் ஸத்திர தன்மையை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்திற்கு தேர் செல்லும் பாதையில் உள்ள மின்கம்பிகளை முன்னரே அகற்றி தங்குதடையின்றி தேர் செல்ல வசதியாக தெருவிளக்குகளை தேவைக்கேற்ப திருப்பி வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

வாகன நிறுத்தம்

தேரோட்டம் நடைபெறும் நாளன்று பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும் வகையில் கோவிலை சுற்றி 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறு இன்றி ஆங்காங்கே வாகன நிறுத்துமிடம் காவல்துறையின் ஒத்துழைப்புடன் அமைக்க வலியுறுத்தப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கேமராக்கள் அமைக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் தேர்வரும் பாதைகளை தூய்மையாக வைத்திருக்க பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்தழைப்பு வழங்க வேண்டும்.

கூட்டத்தில் போலீஸ் துணை கமிஷனர் சரவணக்குமார், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சேக் அயூப், நெல்லை மாநகராட்சி மண்டல தலைவர் மகேஸ்வரி, கவுன்சிலர் ராம கிருஷ்ணன், மாநகர் பொறியாளர் அசோகன், மாநகர் நல அலுவலர் ராஜேந்திரன, உதவி ஆணையாளர் (பொறுப்பு) பைஜூ உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சாரம் கட்டும்பணி

இதற்கிடையே விநாயகர், காந்திமதி அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய தேர்களுக்கு சாரம் கட்டும் பணி மற்றும் அலங்கார தட்டுகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. நேற்று சண்டிகேசுவரர் தேருக்கு சாரம் மற்றும் அலங்கார தட்டுகள் அமைக்கும் பணி தொடங்கியது. மேலும் தேருக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்