உற்சவ நடராஜருக்கு ஆனி திருமஞ்சன திருவிழா
ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை கோவிலில் உற்சவ நடராஜருக்கு சிறப்பு வாய்ந்த ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெற்றது.
ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை கோவிலில் உற்சவ நடராஜருக்கு சிறப்பு வாய்ந்த ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெற்றது.
மரகத நடராஜர்
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை திருத்தலத்தில் மங்களநாதர் மற்றும் மங்களநாயகி ஆகியோர் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் ஒரே கல்லினால் ஆன ஆடும் திருக்கோலத்தில் பச்சை மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையின் பாதுகாப்பு கருதி ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு ஆருத்ரா தரிசனத்தன்று பக்தர்களின் பார்வைக்கு திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடத்தப்படும்.
இதுதவிர, ஆனி மாதத்தில் திருமஞ்சன திருவிழாவின்போது சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். பொதுவாக திருமஞ்சனம் என்றால் மகா அபிஷேகம் என்று பொருள். நம்முடைய ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் பொழுது ஆகும். இவ்வாறு தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதமாகவும், காலைப்பொழுது மாசி மாதமாகவும், உச்சிக்காலம் சித்திரை மாதமாகவும், மாலைப்பொழுது ஆனி மாதமாகவும், இரவுப்பொழுது ஆவணி மாதமாகவும், அர்த்த சாமம் புரட்டாசி மாதம் என்றும் ஒவ்வொரு மாதங்களும் ஒவ்வொரு சிறப்பை பெற்றுள்ளன. அந்தவகையில் சந்தியா காலங்களாக விளங்கும் மார்கழியும், ஆனி மாதமும் தான் இறைவழிபாட்டிற்கு உகந்த மாதங்களாக கருதப்பட்டு வருகிறது. நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு 6 முறை விேசஷ அபிஷேக தினங்களாக கருதப்பட்டாலும், ஆனியும், மார்கழியும் சிறப்பு விஷேக தினங்களாக கருதப்படுகிறது.
சிறப்பு அபிஷேகம்
இதன்படி திருஉத்தரகோசமங்கை கோவிலில் எழுந்தருளியுள்ள மரகத நடராஜருக்கு மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் சிறப்புக்குரிய நாட்களாக உள்ளன. இந்த நாட்களில்தான் மரகத நடராஜருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்படும். மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தன்று மரகத நடராஜருக்கும், ஆனி திருமஞ்சனத்தன்று உற்சவ நடராஜருக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. இதன்படி ஆனி திருமஞ்சன தினமான நேற்று திருஉத்தரகோசமங்கை கோவிலில் அபூர்வ மரகத நடராஜர் சன்னதி முன்புறம் அமைந்துள்ள உற்சவ நடராஜருக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு பால், இளநீர், மஞ்சள்பொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான மூலிகைகளை கொண்டு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. உற்சவ நடராஜர் சந்தனகாப்பு அலங்காரத்தில் தாழம்பூ, வில்வமாலைகள் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதன்பின்னர் நமசிவாய மந்திரங்கள் முழங்க உற்சவ மூர்த்தி வீதிஉலா வந்தது. விழாவில் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன், செயல்அலுவலர் விக்னேசுவரன் ஆகியோர் செய்திருந்தனர்.