செல்போன் பறித்த வழக்கில் கைது செய்ததால் ஆத்திரம்:போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட தம்பதி

ஊட்டியில், செல்போன் பறித்த வழக்கில் கைது செய்ததால் ஆத்திரத்தில் போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-01 18:45 GMT

ஊட்டி: ஊட்டியில், செல்போன் பறித்த வழக்கில் கைது செய்ததால் ஆத்திரத்தில் போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.

பணம், செல்போன் பறிப்பு

ஊட்டி மெயின் பஜார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் காஜா உசேன். இவரது கடைக்கு நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் வந்து மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். ஆனால் காஜா உசேன் பணம் தர மறுத்து விட்டார்.

இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி காஜா உசேனிடம் ரூ.500, செல்போன், கைக்கெடிகாரம் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பி சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த காஜா உசேன் ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காஜா உசேனிடம் பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றது காந்தல் குருசடி காலனி பகுதியை சேர்ந்த ராஜேஷ்(வயது 35) என்பது தெரிய வந்தது.

போலீஸ் நிைலயத்தில் ரகளை

இதையடுத்து ராஜேசை போலீசார் கைது செய்து ஊட்டி மே்றகு போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது விசாரணைக்கு ஒத்துழைக்காத ராஜேஷ் போலீசாரை தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். மேலும் போலீஸ் நிலையத்தில் இருந்த கணினி உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தினார்.

இதற்கிடையே ராஜேஷ் கைது செய்யப்பட்டது குறித்து தகவல் அறிந்த அவரது மனைவி ஆஷா ஊட்டி போலீஸ் நிலையம் வந்து போலீசாரை தகாத வார்த்தையால் திட்டி அங்கு இருந்த போலீசாரின் இருசக்கர வாகனத்தை கல்லால் தாக்கி சேதப்படுத்தினார். இதையடுத்து போலீசார், ஆஷாவையும் கைது செய்து அவர் மீது வழக்குபதிந்தனர். பின்னர் கைதான தம்பதியை ஊட்டி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்