பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் உண்ணாவிரதம்
ஊட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி
ஊட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அங்கன்வாடி பணியாளர்கள் சங்க தலைவர் கவிதா தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் சித்ரா போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாதர் சங்க மாநில தலைவர் தினமாலா கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
அனைத்து மையங்களுக்கும் வினியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டருக்கு உண்டான முழு தொகையை வழங்க வேண்டும். பிற துறை வேலைகளை அங்கன்வாடி ஊழியர்களுக்கு திணிப்பதை கைவிட வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் பழுதடைந்த செல்போனுக்கு பதிலாக புதிய செல்போன் வழங்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை நடத்த அனுமதிக்க கூடாது.
பதவி உயர்வு
10 ஆண்டுகள் பணி முடிந்த ஊழியர்களுக்கு மேற்பார்வையாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். அப்படி இயலாத பட்சத்தில் மேற்பார்வையாளர்களுக்கான கிரேடு ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதில் நீலகிரி மாவட்ட அங்கன்வாடி பணியாளர்கள் சங்க செயலாளர் சசிகலா, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சங்கரலிங்கம், மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஆதிரா, மாவட்ட பொருளாளர் சந்திரலேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.