அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

பெரம்பலூரில் அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-26 19:00 GMT

2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். 2-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மேனகா தலைமை தாங்கினார். செயலாளர் தமிழரசி, பொருளாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மணிமேகலை அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு உணவு சமைத்து வழங்குவதற்கு உதவியாளர்கள் சென்று விட்டதால், போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். குழந்தைகளின் நலன் கருதியும், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் நலன் கருதியும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாத கால விடுமுறை விட வேண்டும். ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். சிலிண்டர் கட்டண ரசீதில் உள்ளபடி ரூ.1,205-ஐ வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்கிட வேண்டும். மகப்பேறு விடுப்பு 1 வருடம் அரசு ஊழியர்களுக்கு போல் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிலையில் கோரிக்கைகள் தொடர்பாக நேற்று அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் சென்னையில் சமூக நலன்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், அச்சங்கத்தினர் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். அதனை தொடர்ந்து நேற்று மதியம் பெரம்பலூரிலும் அங்கன்வாடி ஊழியர்கள் தமிழக அரசுக்கும், சமூக நலத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்