அகவிலைப்படியுடன் சிறப்பு ஓய்வூதியம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

அகவிலைப்படியுடன் சிறப்பு ஓய்வூதியம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-01 18:45 GMT

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மணிக்கண்ணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில துணைத்தலைவர் அபராஜிதன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட செயலாளர் சிவக்குமார், ஆரம்ப சுகாதார மோட்டார் வாகன பராமரிப்புத்துறை சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் ரத்தினம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில தணிக்கையாளர் கிருஷ்ணமூர்த்தி நிறைவுரையாற்றினார். சத்துணவு, அங்கன்வாடி திட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு இணையாக அகவிலைப்படியுடன் ரூ.6,750 மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி திட்டங்களில் பணிபுரிபவர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து அரசுத்துறைகளிலும் காலியாக உள்ள நிரந்தர காலமுறை ஊதியத்தை காலிப்பணியிடங்களில் 50 சதவீத பணியிடங்களை ஒதுக்கி அதில் தகுதியுள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட்டு சத்துணவு திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கண்ணில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் கமலா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்