அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்
மயிலாடுதுறையில் அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது
மயிலாடுதுறையில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் தங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் மாலை 5 மணிமுதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் பேபி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லதா முன்னிலை வகித்தார். மயிலாடுதுறையில் நேற்று காலை பெய்த மழையிலும் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனிடம் சங்க மாநில நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் போராட்டம் வாபஸ் பெற்றதாக தெரிவித்து நேற்று மதியம் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலைந்து சென்றனர்.