அங்கன்வாடி ஊழியர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-26 15:01 GMT

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு உள்ளூர் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்புவதோடு, பணிச்சுமையை குறைக்க வேண்டும். பதவி உயர்வு மற்றும் மகப்பேறு விடுப்பு 1 வருடம் வழங்க வேண்டும். மேலும் உணவு செலவீனங்களை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே, காத்திருப்பு போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

போராட்டத்துக்கு மாவட்ட தலைவி செல்வ தனபாக்கியம் தலைமை தாங்கினார். செயலாளர் பத்மாவதி முன்னிலை வகித்தார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். இரவு முழுவதும் தொடர்ந்த இந்த காத்திருப்பு போராட்டத்தில், ஏராளமான ஊழியர்கள் விடிய, விடிய அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். 2-வது நாளாக நேற்று காலை காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. இதற்கிடையே அங்கன்வாடி ஊழியர்களுடன் அமைச்சர் கீதாஜீவன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையொட்டி திண்டுக்கல்லில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்