அந்தியூர் வாரச்சந்தையில் வெற்றிலை ஒன்று 2 ரூபாய் 20 காசுக்கு விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி
விவசாயிகள் மகிழ்ச்சி
அந்தியூர் வாரச்சந்தையில் வெற்றிலை ஒன்று 2 ரூபாய் 20 காசுக்கு விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அந்தியூர் வாரச்சந்தை
அந்தியூர் வாரச்சந்தையில் வாரம்தோறும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெற்றிலை விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு அந்தியூர், அத்தாணி, வேம்பத்தி, வெள்ளாளபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், காட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் வெற்றிலைகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.
இங்கு ராசி வெற்றிலை, பீடா வெற்றிலை என தரம் வாரியாக வெற்றிலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ராசி- பீடா வெற்றிலை
ராசி வெற்றிலை என்பது மிகவும் மிருதுவாகவும், கரும்பச்சை நிறத்திலும் காணப்படும். இந்த வெற்றிலைகள் திருமண நிகழ்ச்சி, கோவிலில் சாமிக்கு படைப்பது போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும்.
பீடா வெற்றிைல சற்று கடினமானதாகவும், வெளிர்பச்சை நிறத்திலும் இருக்கும். மேலும் இந்த வெற்றிலை காரத்தன்மை மிகுந்ததாக இருக்கும். இந்த வகை வெற்றிலை பீடா தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்படும்.
வெற்றிலைகள் அனைத்தும் கட்டுகளாக விற்பனை செய்யப்படும். ஒரு வெற்றிலை கட்டில் 100 எண்ணிக்கையிலான வெற்றிலைகள் இருக்கும்.
வெற்றிலை ஒன்று 2 ரூபாய் 20 காசு
இந்த நிலையில் அந்தியூர் வாரச்சந்தையில் நேற்று வழக்கம்போல் வெற்றிலை விற்பனை நடைபெற்றது. நேற்று நடந்த சந்தைக்கு ராசி மற்றும் பீடா வகை வெற்றிலைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் ராசி வெற்றிலை கட்டு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.200-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.220-க்கும் விற்பனை ஆனது. அதாவது ராசி வெற்றிலை ஒன்று 2 ரூபாய் முதல் 2 ரூபாய் 20 காசு வரை விற்பனை செய்யப்பட்டது.
பீடா வெற்றிலை கட்டு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.70-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.80-க்கும் விற்கப்பட்டது. வெற்றிலை மொத்தம் ரூ.4 லட்சத்துக்கு விற்பனை ஆனது.
விவசாயிகள் மகிழ்ச்சி
கடந்த 20-ந் தேதி ராசி வெற்றிலை கட்டு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.150-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.180-க்கும், பீடா வெற்றிலை குறைந்தபட்ச விலையாக ரூ.50-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 20-ந் தேதிைய விட நேற்று ராசி மற்றும் பீடா வகை வெற்றிலை விலை உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வரத்து குறைவு
இதுகுறித்து அந்தியூர் பகுதியை சேர்ந்த வெற்றிலை விவசாயிகள் கூறுகையில், 'பொதுவாக வெற்றிலை அதிக அளவில் விளைச்சலாகி வரும்போது ராசி வெற்றிலை கட்டு ஒன்று ரூ.50 முதல் 70 வரையும், பீடா வெற்றிலை ரூ.20 முதல் ரூ.40 வரையும் விற்பனை ஆகும். தற்போது பனிக்காலம் என்பதால் வெற்றிலை அதிக அளவில் வளராது. இதனால் சந்தைக்கு வெற்றிலை வரத்து குறைந்துவிட்டது. அதே வேளையில் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகள், புதுமனை புகுவிழா நிகழ்ச்சிகள் போன்றவை இந்த மாதத்தில் அதிக அளவில் வருவதால் வெற்றிலைக்கான தேவை அதிகரித்து உள்ளது. போட்டி போட்டு விலையை நிர்ணயம் செய்து வெற்றிலைகளை வியாபாரிகள் வாங்கி சென்றனர். இதனால் வெற்றிலை விலை அதிகரித்து விற்பனை ஆனது,' என்றனர்.
இந்த வெற்றிலைகளை ஈரோடு, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம், தருமபுரி, சேலம், மேச்சேரி, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து வாங்கி சென்றனர்.