தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக உடனே அவசர சட்டம் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான அவசர சட்டத்தை உடனே கொண்டுவர வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-08-12 21:49 GMT

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டியிடம் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களும் இங்கு முழுமையாக தடை செய்யப்பட வேண்டும்.

ஆன்லைன் ரம்மி என்பது திறமை சார்ந்த விளையாட்டு அல்ல என்பதை சட்டபூர்வமாக நிரூபிக்க முடியும்.

தமிழகத்தில் இந்த ஓராண்டில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை, கொலை என மொத்தம் 28 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு

பின்னர் தலைமைச்செயலகத்தில் அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி:-

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் மக்களுக்கு பல இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழு அறிக்கை அளித்தும் இன்னும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த சூதாட்டத்தால் மக்கள் பணம் ரூ.15 ஆயிரம் கோடி இழக்கப்படுகிறது.

75-வது சுதந்திர தின விழாவின்போது பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அறிவிக்க வேண்டும்.

போதைப்பொருள் பழக்கம்

அதுபோல போதைப்பொருள் பழக்கமும் அதிகரித்து வருகிறது. நாம் அடுத்த தலைமுறையை காப்பாற்றியாக வேண்டும். இதுபற்றி நான் முதல்-அமைச்சரை சந்தித்து கருத்து தெரிவித்தேன். அதை ஏற்று முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர்கள், போலீசாருடன் கூட்டத்தை நடத்தினார். அதற்கு அவரை பாராட்டுகிறேன்.

போதை பழக்கம் கடந்த 15 ஆண்டுகாலமாக அதிகரித்து வருகிறது. எந்த இடத்தில் இருந்து போதைப்பொருள் வருகிறது என்பதை கண்டறிந்து தடுக்க வேண்டும். தற்போது அரசு நடவடிக்கை எடுக்கிறது என்றாலும் அது போதுமானதாக இல்லை. நடவடிக்கையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். 15 ஆயிரம் போலீசாரை இதற்கான தனிப்பிரிவில் நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்