ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Update: 2022-09-30 11:58 GMT

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் தெற்கு மற்றும் மத்திய மாவட்ட பா.ம.க. சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். முன்னதாக அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது பண்டிகை காலம் என்பதால் தமிழகத்தில் ஆம்னி பஸ் கட்டணம் விமான கட்டணத்தினை விட அதிகமாக உள்ளது. மேலும் மின்கட்டண உயர்வை இந்த அரசு கைவிட வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வதாக தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக அளித்தது. அதனை நிறைவேற்ற வேண்டும்.

மாதம், மாதம் மின்கட்டண கணக்கெடுப்பினை தமிழக அரசு நடைமுறை படுத்த வேண்டும். இதனையும் தேர்தல் அறிக்கையில் தமிழக அரசு வாக்குறுதியாக அளித்துள்ளது. அதனை செயல்படுத்த வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் தமிழக அரசின் தீர்மானத்தினை வரவேற்கிறேன். இதற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும். வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை தமிழக அரசு சட்டமாக்கி சமூக நீதியை காக்க வேண்டும்.

மதுபான கடைகளை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தமிழக அரசு மதுபான பார்களை திறந்து வருகின்றது. கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்கள் பல்வேறு வடிவங்களில் தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ளது. இதனை தடுக்க போதை ஒழிப்பு துறையில் போதுமான போலீசாரை நியமிக்க வேண்டும்.

தமிழகத்தில் பருவ நிலை மாற்றத்தால் ஒரு பகுதியில் வெள்ள பெருக்கும், மற்ற பகுதியில் வறட்சியும் ஏற்படுகிறது. நீர் மேலாண்மை திட்டத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்