சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி எழுச்சி நடைபயணம் - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் 29, 30-ந்தேதிகளில் எழுச்சி நடைபயணம் செய்ய உள்ளதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் மிகச்சிறிய மாவட்டங்களில் ஒன்றான அரியலூரில் மொத்தம் 632 ஏரிகள் உள்ளன. கடலுடன் ஒப்பிடக்கூடிய கொள்ளிடம் என்ற மிகப்பெரிய ஆறும், மருதையாறும் அரியலூர் மாவட்டத்தில் தான் பாய்கின்றன. ஆனாலும் அரியலூர் மாவட்டம் இன்னும் வறண்ட பூமியாகத் தான் உள்ளது. அங்கு மிகக்குறைந்த அளவில் தான் பாசன வசதி பெற்ற நிலங்கள் உள்ளன.
கி.பி. 9-ம் நூற்றாண்டில் தொடங்கி 11-ம் நூற்றாண்டு வரை அரியலூர் மாவட்டத்தில் சோழ மன்னர்கள் ஏற்படுத்திய பாசனக் கட்டமைப்புகள் வியக்க வைக்கக்கூடியவை. சோழர் கால பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுப்பதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை தொழில் வெகு சிறப்பாக வளரும்.
அதனால்தான், அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 29-ந்தேதி சனிக்கிழமை, 30-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் அரியலூர் மாவட்டத்தில் எழுச்சி நடைபயணம் மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறேன்.
அரியலூர் மாவட்டத்தின் கீழப்பழுவூரில் தொடங்கும் எழுச்சி நடைபயணம் கரைப்வெட்டி, கண்டராதித்தம், திருமானூர் வழியாக காட்டுமன்னார்கோயில் என்ற இடத்தில் நிறைவடையும். அரியலூர் மாவட்டத்தை வளப்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் எனது தலைமையில் நடைபெறும் இந்த நடைபயணத்தில், அரசியலைக் கடந்து அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.