அனந்தபுரி, நாகர்கோவில் ரெயில்கள் நேரம் மாற்றம்
நெல்லை -நாகர்கோவில், சென்னை -கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேரம் வருகிற 7-ந்தேதி முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை-கன்னியாகுமரி இடையே ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டதை தொடர்ந்து ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக கொல்லத்துக்கு தினசரி இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ரெயில் நேரம் வருகிற 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து வழக்கம் போல் இரவு 8.10 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை நெல்லை சந்திப்புக்கு காலை 6.45 மணிக்கு பதிலாக, 15 நிமிடங்கள் முன்னதாக 6.30 மணிக்கு வந்து 6.35 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. தொடர்ந்து நாங்குநேரிக்கு 7.03 மணி, வள்ளியூருக்கு 7.15 மணி, ஆரல்வாய்மொழிக்கு 7.38 மணி, நாகர்கோவில் டவுனுக்கு 8.07 மணிக்கு வந்து செல்கிறது. பின்னர் இந்த ரெயில் காலை 11.45 மணிக்கு பதிலாக, 5 நிமிடங்கள் முன்னதாக காலை 11.40 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது.
இதுதவிர நெல்லை சந்திப்பில் இருந்து தினசரி காலை 6.35 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் பாசஞ்சர் சிறப்பு ரெயில் 7-ந்தேதி முதல் காலை 7.10 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் நாங்குநேரிக்கு 7.49 மணி, வள்ளியூர்- 7.52 மணி, வடக்கு பணகுடி- 8.03 மணி, காவல்கிணறு- 8.09 மணி, ஆரல்வாய்மொழி- 8.21 மணி, தோவாளைக்கு 8.26 மணிக்கு வந்து செல்லும். நாகர்கோவில் சந்திப்பை காலை 8.10 மணிக்கு பதிலாக 9 மணிக்கு சென்றடைகிறது.