திருப்பரங்குன்றத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் பூங்கா
திருப்பரங்குன்றம் பாண்டியன் நகரில் பராமரிப்பின்றி கிடக்கும் பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் பாண்டியன் நகரில் பராமரிப்பின்றி கிடக்கும் பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக வைத்துள்ளனர்.
பொழுதுபோக்கு பூங்கா
மதுரை மாநகராட்சி எல்லை விரிவாக்கப்பட்ட பகுதியான திருப்பரங்குன்றம் பாண்டியன் நகரில் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பராமரிப்புடன் இருந்த இந்த பூங்காவில் தினமும் மாலை நேரத்தில் சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் மட்டுமல்லாது பெரியவர்கள் பூங்காவில் பொழுது போக்கி வந்தனர். மேலும் பள்ளி விடுமுறை நாட்களில் மாணவ, மாணவிகள் பொழுதுபோக்குவதற்கு இந்த பூங்காவில் தஞ்சமடைவார்கள். ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் நாளில் விளையாட்டு களமாக இந்த பூங்கா இருந்து வந்தது.
ஆனால் மாணவ, மாணவிகள் மற்றும் சிறுவர், சிறுமிகள் ஆனந்தமாக துள்ளி குதித்து விளையாடி வந்த இந்த பூங்காவானது தற்போது பராமரிப்பு இன்றி போய்விட்டது. இதனால் பூங்காவிற்கு யாரும் வராமல் களை இழந்து வெறிச்சோடி காணப்படுகிறது. பூங்காவில் உள்ள விளையாட்டு சாதனமான ஊஞ்சல் உள்ளிட்ட பொருட்கள் உருக்குலைந்து காட்சி பொருளாக உள்ளது. மேலும் இங்குள்ள பொம்மைகள் இல்லாத நிலை உள்ளது. செயற்கை நீருற்று செயலற்று பெயருக்கு இடத்தை காத்து நிற்கிறது
கோரிக்கை
பூங்காவின் நுழைவுவாயிலில் உள்ள மகாகவி பாரதியாரின் சிலையும் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனால் இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள், சிறுவர், சிறுமிகள் மற்றும் பெரியோர் பொழுதுபோக்க பூங்காவிற்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் இந்த பூங்காவில் உள்ள உடைந்த விளையாட்டு சாதனங்களை சீரமைக்க வேண்டும். கூடுதலாக புதிய விளையாட்டு சாதனங்களை அமைக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பூங்காவை சீரமைக்க முன்வரவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.