முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ
மதுரை உசிலம்பட்டி அருகே சீமானுத்து அரசு தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை உசிலம்பட்டி அதிமுக எம்.எல்.ஏ அய்யப்பன் தொடங்கி வைத்தார்.
மதுரை,
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியருக்கு காலை உணவுத் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தார். தொடர்ந்து, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் இன்று முதல் விரிவுபடுத்தப்படுகிறது.
அதன்படி திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு. கருணாநிதி படித்த பள்ளியில் விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். இதன் மூலம் 31,000 அரசுப் பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைவர்.
முன்னதாக, தமிழ்நாட்டில் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள்(அதிமுக எம்எல்ஏக்களும்), எம்.பி.க்கள் அங்குள்ள அரசுப் பள்ளிகளில் இந்தத் திட்டத்தைத் தொடக்கிவைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டிருந்தார்.
அந்தவகையில், மதுரை உசிலம்பட்டி அருகே சீமானுத்து அரசு தொடக்கப்பள்ளியில், அதிமுக எம்எல்ஏ அய்யப்பன் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடக்கி வைத்தார். இவர் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், திமுக அரசின் ஒரு திட்டத்தை அதிமுக எம்எல்ஏ தொடக்கிவைத்திருப்பது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது.