ரூ.25 லட்சம் கடன்பெற்று மோசடி செய்த மூதாட்டி
ரூ.25 லட்சம் கடன்பெற்று மோசடி செய்த மூதாட்டி மகனுடன் தலைமறைவானார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பூபதி நகர் பகுதியை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்தநிலையில் மகன்களின் திருமண செலவு மற்றும் குடும்ப செலவுக்காக அப்பகுதியை சேர்ந்த நபர்களிடம் மூதாட்டி சுமார் ரூ.25 லட்சம் வரை கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடன் வாங்கி மூன்று வருடங்கள் ஆகியும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பணம் தராமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கடன் கொடுத்தவர்கள் மூதாட்டிக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால் கடந்த மாதம் 19-ந் தேதி மூதாீட்டி வீட்டை காலி செய்து கொண்டு இரண்டாவது மகனுடன் தலைமறைவாகி உள்ளார். இதனால் மூத்த மகனை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு பணத்தை கேட்டுள்ளனர். இதற்கு தான் பொறுப்பாக முடியாது என அவர் கூறியுள்ளார்.
கடன் கொடுத்தவர்களின் தொல்லையை சமாளிக்க முடியாத அவரும் வீட்டை காலி செய்து கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். அவரை பொதுமக்கள் சிறை பிடித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் இது குறித்து ஆற்காடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.