தலையில் கல்லை போட்டு மூதாட்டி கொலை

தலையில் கல்லை போட்டு மூதாட்டி கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-09-05 21:15 GMT

மூதாட்டி

திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை அருகே இனாம்புலியூர் கீழமேடு பகுதியில் உள்ள செக்கடி தெருவை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது 75). விவசாயி. இவருடைய மனைவி அமிர்தம்(70). இந்த தம்பதிக்கு அடக்கி(50), பாப்பாத்தி(48), தனலட்சுமி(46), போதும் பொண்ணு(44) ஆகிய 4 மகள்களும், சங்கிலி(42), சின்னத்துரை(40) என 2 மகன்களும் உண்டு. இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

இதில் பாப்பாத்திக்கும், அதே ஊரை சேர்ந்த மணி என்பவருக்கும் திருமணமாகி சுரேஷ்(27) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சுரேஷ் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். கோவிந்தனின் மற்ற 3 மகள்களும் தங்கள் குடும்பத்துடன் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கோவிந்தன் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் அவரது மகன் சங்கிலியும் இறந்துவிட்டார்.

பணம் கேட்டு தகராறு

இதையடுத்து அமிர்தம், சின்னத்துரையின் குடும்பம் மற்றும் மூத்த மருமகள் ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். இவர்கள், தங்களிடம் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். மேலும் அமிர்தம் 50 செம்மறி ஆடுகளை தனது சொந்த செலவுக்காக வளர்த்து வந்தார். இதில் 30 ஆடுகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்று, பணம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் அங்கு வந்த சுரேஷ், ஆடு விற்ற பணத்தில் பங்கு கேட்டு அமிர்தத்திடம் தகராறு செய்துள்ளார். ஆனால் பணம் தர அமிர்தம் மறுத்துள்ளார். இதையடுத்து கிரிக்கெட் ஸ்டெம்பால் அமிர்தத்தை தாக்கிய சுரேஷ், பின்னர் கல்லை தூக்கி அமிர்தத்தின் தலையில் போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வந்து பார்த்தபோது அமிர்தம் படுகாயத்துடன் இறந்து கிடந்தார்.

கைது

இது குறித்து உடனடியாக சோமரசம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் அங்கு வந்து அமிர்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தை ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பரவாசுதேவன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்