தனியார் மில்லின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி பகுதியில் பெய்த பலத்த மழையினால் தனியார் மில்லின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியானார். இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-22 20:10 GMT

ஓமலூர்:-

ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி பகுதியில் பெய்த பலத்த மழையினால் தனியார் மில்லின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியானார். இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுற்றுச்சுவர்

ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி கலர் காடு அருகே உள்ள பெருமாள் கோவில் காடு பகுதியை சேர்ந்தவர் காவேரி. இவருடைய மனைவி கோவிந்தம்மாள் (வயது 65). இவர்களுக்கு கோவிந்தராஜ் (45) என்ற மகனும், அலமேலு, லட்சுமி, வளர்மதி என்ற 3 மகள்களும் உள்ளனர். கோவிந்தராஜ் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் நூல் மில்லில் தங்கி பிட்டராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களது வீட்டில் கோவிந்தம்மாள், அவரது மருமகள் செல்வி (40), அவரது பேத்திகள் ரத்ன பாலா (15), தர்ஷினி (13) ஆகியோர் இருந்து உள்ளனர். கோவிந்தம்மாள் வீட்டையொட்டி தனியார் பருப்பு மில்லின் காலி இடத்தின் சுற்றுச்சுவர் உள்ளது.

மூதாட்டி பலி

இதனிடையே நேற்று முன்தினம் இரவு தீவட்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையால் தனியார் பருப்பு மில்லுக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை சுற்றி கட்டப்பட்ட சுற்றுச்சுவரையொட்டி 3 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் சுற்றுச்சுவர் சுமார் 100 அடி நீளத்துக்கு முழுவதும் இடிந்து கோவிந்தம்மாளின் வீட்டின் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய கோவிந்தம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் செல்வி, ரத்னபாலா. தர்ஷினி ஆகியோர் சுற்றுச்சுவர் இடிந்ததால் பாய்ந்த வெள்ளத்தில் சுமார் 100 அடி தூரத்திற்கு மூன்று பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அவர்களை சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.

போராட்டம்

இது குறித்து தகவல் அறிந்த காடையாம்பட்டி தாசில்தார் அருள் பிரகாஷ், ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கீதா, தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசேகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த கோவிந்தமாளின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே அங்கு பா.ம.க. மாவட்ட தலைவர் மாணிக்கம் மற்றும், பா.ம.க. நிர்வாகிகள், உறவினர்கள் குவிந்தனர். அவர்கள் தனியார் பருப்பு மில் உரிமையாளர் உரிய இழப்பீடு தந்தால் தான், கோவிந்தமாளின் உடலை மீட்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டப்பட்டதால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது எனவும் கூறினார்கள்.

பேச்சுவார்த்தை

இதைத்தொடர்ந்து அவர்களுடன் போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து கோவிந்தமாளின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கோவிந்தம்மாளின் உடலை பார்த்த உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்