யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்

யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர் இதுவரை ரூ.50 லட்சம் வழங்கியதாக தகவல்.

Update: 2023-02-06 18:41 GMT

திருச்சி,

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 73). கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினரிடம் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, பிரிந்து வந்து யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். கடந்த 1980-ம் ஆண்டு முதல் தனக்கு யாசகமாக கிடைக்கும் பணத்தை நலிவடைந்த பள்ளி வளர்ச்சிக்கும், பள்ளி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கும் நன்கொடையாக கொடுத்து வருகிறார். கொரோனா கால கட்டத்திற்கு பின்னர் தனக்கு கிடைக்கும் யாசக பணத்தை அரசு பொது நிவாரண நிதிக்கு அளித்து வருகிறார். இந்நிலையில் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பூல்பாண்டி, தனக்கு யாசகமாக கிடைத்த ரூ.10 ஆயிரத்தை கலெக்டர் பிரதீப்குமாரை நேரில் சந்தித்து வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ஒரு வார காலத்தில் எனக்கு கிடைத்த ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் சேர்ப்பதற்காக கலெக்டரிடம் வழங்கி உள்ளேன். இதுவரை யாசகமாக எனக்கு கிடைத்த ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான தொகையை வழங்கி உள்ளேன். யாசகமாக பெறும் பணத்தை நான் என் சொந்த நலனிற்காக எடுப்பதே இல்லை. இதனை பொதுமக்கள் நன்கு அறிந்துள்ளதாலும், யாசகம் பெறும் தொகையினை நற்காரியங்களுக்காக அரசிடம் வழங்குவதால் எனக்கு அவர்களாகவே முன்வந்து யாசகம் அளிக்கின்றனர். இனி ஜூன் மாதம் வரை நான் யாசகம் எடுத்து கிடைக்கும் பணம் அனைத்தையும் பள்ளிகளுக்கு வழங்க உள்ளேன் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்